அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க கோரி வழக்கு
ஜல்லிக்கட்டு போட்டிகளின் அனைத்து சமூகத்தினர் கொண்ட குழு அமைக்க வேண்டும் என்ற வழக்கை நீதிபதிகள் நாளை ஒத்திவைத்தனர்.
மதுரை,
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவர் மதுரை ஐகோர்ட்டிலில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், மதுரை அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் ஜல்லிக்கட்டு நடைபெறும். அனைத்து சமுதாயத்தினரின் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். கடந்த 2023-ம் ஆண்டு கண்ணன் என்பவர் தென்கால் பாசன விவசாயிகள் சங்கம் எனும் சங்கத்தை பதிவு செய்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை கோரினார். இந்த சங்கத்தில் அவரது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மட்டுமே உறுப்பினர்களாக உள்ளனர்.
ஜல்லிக்கட்டு குழுவில் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்பதை தடுத்து வருகிறார். அமைதி பேச்சுவார்த்தையில் பட்டியல் சமூகத்தினருடன் சமமாக அமர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த தேவை இல்லை என தெரிவித்தார். கடந்த ஆண்டு இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் தமிழர்களின் கலாச்சார விழாவான ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.
பல இடங்களில் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க பட்டியல் சமூகத்தினரை அனுமதிப்பதில்லை. பட்டியல் சமூகத்தினரை தவிர்த்து ஜல்லிக்கட்டை நடத்துவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஆகவே அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி. மரிய கிளாட் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது நீதிபதிகள், கடைசி நேரத்தில் வழக்கு தொடர்ந்தால், உடனடியாக எவ்வாறு தீர்ப்பு அளிக்க முடியும்? என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், மதுரை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை நாளை ஒத்திவைத்தனர்.