ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்தான் திமுக அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி


ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள்தான் திமுக அரசுக்கு முக்கியமா? - ராமதாஸ் கேள்வி
x
தினத்தந்தி 23 March 2025 5:14 AM (Updated: 23 March 2025 6:53 AM)
t-max-icont-min-icon

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சி வடக்கு தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த கனகராஜ் என்ற 27 வயது இளைஞர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட கடன் மற்றும் மன உளைச்சல் காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கனகராஜ் மத்திய அரசின் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி வந்திருக்கிறார். அவருக்கு 9 மாதங்களுக்கு முன்பு தான் திருமணமாகியிருக்கிறது. மகிழ்ச்சியுடன் வாழ வேண்டிய இளைஞரை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளியிருக்கிறது என்றால் ஆன்லைன் சூதாட்டம் எவ்வளவு மோசமானது? என்பதை அனைவரும், குறிப்பாக ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முடிவு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த 2023 ஆண்டு நவம்பர் 9-ம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்குப் பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்ட 25-ம் நபர் கனகராஜ் ஆவார். 2025-ம் ஆண்டு பிறந்து 3 மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் இதுவரை 8 பேர் தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர்.

ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து திமுகவினரை காப்பாற்றுவது தொடர்பான வழக்குகளை எல்லாம் விரைவுபடுத்தும் திமுக அரசு, இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டுவதை வைத்துப் பார்க்கும் போது மக்கள் நலனை விட ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நலனைத் தான் முக்கியமாக நினைக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. உறுதியான நடவடிக்கைகளின் மூலம் இந்த ஐயத்தைப் போக்க வேண்டியது திமுக அரசின் கடமையாகும்.

தமிழக அரசின் அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த 25 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இன்னும் எத்தனை உயிர்கள் பலியாவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறது? தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் இனியும் அலட்சியம் காட்டாமல் உச்சநீதிமன்றத்தில் ஆன்லைன் சூதாட்டத் தடை தொடர்பான வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வந்து ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story