'பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல், செயல் அனைத்தும் பாலியல் துன்புறுத்தல்தான்' - ஐகோர்ட்டு கருத்து


பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல், செயல் அனைத்தும் பாலியல் துன்புறுத்தல்தான் - ஐகோர்ட்டு கருத்து
x

பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தும் சொல், செயல் அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான் என ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை,

சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் அதிகாரிக்கு எதிராக அங்கு பணியாற்றும் 3 பெண்கள் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தனர். இந்த புகார் குறித்து விசாரித்த அந்த நிறுவனத்தின் விசாகா குழு, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு 2 ஆண்டுகளுக்கு ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கக் கூடாது என பரிந்துரைத்தது.

இந்த பரிந்துரையை எதிர்த்து அந்த அதிகாரி சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த தொழிலாளர் நல நீதிமன்றம், விசாகா குழுவின் பரிந்துரையை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, மென்பொருள் நிறுவனம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மென்பொருள் நிறுவனத்தின் தரப்பு வாதத்தில், குற்றம்சாட்டப்பட்ட நபர் பெண்கள் வேலை பார்க்கும் மேஜைகளுக்கு பின்னால் நின்றுகொண்டு அவர்களை தொட்டு அசவுகரியம் ஏற்படுத்தியதாகவும், உடை அளவை கேட்டு தவறாக நடந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரி தரப்பில், பாலியல் துன்புறுத்தல் செய்யும் நோக்கில் அவ்வாறு பெண்கள் பின்னால் சென்று நிற்கவில்லை என்றும், உயர் அதிகாரி என்ற முறையில் அவர்களின் பணியை கண்காணிக்கவே அவ்வாறு செய்ததாகவும் வாதிடப்பட்டது.

அதிகாரியின் தரப்பு வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி, பணியிடத்தில் பெண்களுக்கு அசவுகரியம் ஏற்படுத்தக் கூடிய சொல், செயல் அனைத்துமே பாலியல் துன்புறுத்தல்தான் என்று தெளிவுபடுத்தியுள்ளார். மேலும் தொழிலாளர் நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த நீதிபதி, விசாகா குழுவின் பரிந்துரை செல்லும் என்று உத்தரவிட்டுள்ளார்.

பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான சட்டம், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களுக்கு நடந்ததை எவ்வாறு உணர்கிறார்கள் என்பதை முதன்மைப்படுத்துகிறதே தவிர, துன்புறுத்துபவர்களின் நோக்கங்களை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.


Next Story