கடலூர், விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட அண்ணாமலை


கடலூர் மற்றும் விழுப்புரத்தில் மழை வெள்ள பாதிப்புகளை அண்ணாமலை நேரில் பார்வையிட்டார்.

கடலூர்,

பெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்ததுள்ளது. இந்த நிலையில், கடலூர் மற்றும் விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டார். இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

"பெஞ்சல் புயலில் பாதிப்புக்குள்ளான, கடலூர் மாவட்டம் திருப்பாப்புலியூருக்குச் சென்று, பொதுமக்களை நேரில் சந்தித்துப் பேசினோம். வெள்ள பாதிப்பிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு விரைவில் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை, தமிழக பா.ஜ.க. சார்பாக மேற்கொள்வோம் என்று ஆறுதல் தெரிவித்து, அந்தப் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 250 குடும்பங்களுக்கு, நிவாரணப் பொருட்களை வழங்கினோம்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம் அனுமந்தை கிராமத்தில், பெஞ்சல் புயலால் பாதிப்புக்குள்ளான விவசாய நிலங்களைப் பார்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்துப் பேசினோம். இந்தப் பகுதியில் சுமார் 5,000 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மூழ்கியிருக்கும் நெற்கதிர்களை, வெள்ளத்திற்குள் இறங்கி எடுத்துக் காட்டிய விவசாயிகளின் மனவேதனையைப் புரிந்து கொள்ள முடிகிறது. பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு, தமிழக பா.ஜ.க. எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று உறுதி அளித்தோம்."

இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.


Next Story