அண்ணா பல்கலைகழக விவகாரம்: அதிமுக மகளிர் அணியினர் நாளை போராட்டம்
எதிர்க்கட்சிகளை வசைபாடுவதன்மூலம், இவர்கள் யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ என்கிற ஐயம் எழுந்துள்ளது என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ் நாட்டில் திமுக அரசு பதவியேற்ற கடந்த 44 மாத காலத்தில், பெண்களுக்கு எதிராக நடைபெற்று வரும் பல்வேறு வன்கொடுமைச் சம்பவங்கள்; பாலியல் சீண்டல்கள்; கொலை, கொள்ளை, வழிப்பறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோதச் செயல்களும் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகின்றன. சட்டம்-ஒழுங்கு முற்றிலுமாக சீர்கெட்டுள்ளது. இதன் உச்சமாக, தமிழ் நாட்டின் தலைநகரில் மிகுந்த பாதுகாப்புக்குரியதாகக் கருதப்படும் உலகப் புகழ்பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே, பல்கலைக்கழகமாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், முறையாக பாதுகாப்பு வழங்குவதில் தொடங்கி, கண்காணிப்பு கேமராக்கள் பராமரிப்பது வரை அரசு நிர்வாகம் முழுமையாக தோல்வி அடைந்திருக்கிறது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள 'சார்' என்ற அந்த ஒரு நபர் யார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகின்றபோது, அதற்கு முறையான பதில் அளிக்காமல் முதலமைச்சரும், அமைச்சர்களும் பதற்றமடைந்து, எதிர்க்கட்சிகளை வசைபாடுவதன்மூலம், இவர்கள் யாரோ ஒருவரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார்களோ என்கிற ஐயம் எழுந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்கையில், நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் அமைச்சர் ஒருவர், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவதூறு செய்திகளைப் பரப்பி, அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியை திசை திருப்பப் பார்க்கிறார்.
எப்.ஐ.ஆர் (FIR)கசியவிட்டது மற்றும் முறையாக விசாரணை நடத்தாதது குறித்து, ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தமிழ் நாடு அரசுக்குத் தெரிவித்துள்ள நிலையில், இன்னும்கூட இந்த வழக்கின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைதுசெய்ய திரு. ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு அக்கறை காட்டவில்லை. 'யார் அந்த சார்?' என்கிற கேள்வி, பிரதான எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும் எழுப்புகின்ற கேள்வி அல்ல. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழ் நாட்டு மக்களே எழுப்புகின்ற கேள்வி. இந்தக் கேள்விக்கு பதில் அளிக்கத் தவிர்ப்பதன்மூலம் முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கை பாதுகாப்பது என்கிற பொறுப்பில் இருந்து விலகி இருக்கிறார். எனவே, விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து, உண்மையான குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்த வலியுறுத்தி, களம் கண்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற காரணத்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து போராடி வருகிறது.
இந்த விவகாரத்தில், குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்ற ஞானசேகரன் என்கிற நபர், ஆளும் திமுக கட்சிப் பிரமுகர்களுடனும், துணை முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட திமுக-வினருடனும் நெருக்கமாக இருக்கின்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்ற சூழலில், குற்றவாளிக்கு ஆளும் கட்சியோடு நெருக்கமான தொடர்பு இருக்கிறது என்பது அம்பலப்பட்டுப்போயிருக்கின்ற நிலையில், இதுகுறித்து முதலமைச்சர் எந்தவித விளக்கமும் கொடுக்காமல் தவிர்ப்பது ஏன்?இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதியைக் கண்டித்தும்; பெண்களுக்கு எதிராக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வரும் பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்கள் முதலானவற்றை கட்டுப்படுத்தத் தவறிய; சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கத் தவறிய விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியைக் கண்டித்தும்; 'பாலியல் குற்றவாளிகளின் சரணாலயம் அதிமுக' என அநாகரீகமான, அருவருக்கத்தக்க, அப்பட்டமான ஒரு பச்சைப் பொய்யை கூறியுள்ள விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை அமைச்சரைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மகளிர் அணியின் சார்பில், நாளை(11.1.2025) - சனிக் கிழமை காலை 10 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.