அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கு பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்படவில்லை - அண்ணாமலை கண்டனம்
அங்கன்வாடி மையங்களில், சுமார் 18,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கல்வி ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் ஆகியும், தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகளும், பயிற்சிப் புத்தகங்களும் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரியவருகிறது.
அங்கன்வாடி பள்ளிகளின் நோக்கமே, பள்ளிக்கல்வி தொடங்கும் முன், குழந்தைகள், முறையான அடிப்படைக் கல்வி பெற்றிருக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் வரையில், அங்கன்வாடி குழந்தைகள், பயிற்சி புத்தகங்களில் உள்ள, காய்கறிகளின் பெயர்கள், விடுபட்ட எழுத்துக்கள், படம் வரைதல் உள்ளிட்ட பயிற்சிகளில் தேர்ந்திருக்க வேண்டும். ஆனால், ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் பயிற்சி புத்தகங்களே வழங்கப்படாததால், குழந்தைகளுக்கு எந்த அடிப்படைப் பயிற்சியும் கிடைக்கவில்லை. குழந்தைகளின் சிந்தனைத் திறனைத் தூண்டும் எந்தப் பயிற்சிகளும் வழங்கப்படாததால், இது குழந்தைகளின் கற்றல் திறனையும் பாதிக்கும்.
அது மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் சுமார் 54,000 அங்கன்வாடி மையங்களில், சுமார் 18,000 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும், இதனால், பணியாளர்கள், ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று மையங்களைக் கவனித்துக் கொள்ள நேர்வதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில், தமிழகத்தில் பணியாற்றும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசுப் பணியாளர்களாகப் பணியமர்த்தி காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்றும், அவர்களுக்குக் குறைந்தபட்ச ஓய்வூதியமும், பணிக்கொடையும் வழங்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆட்சிக்கு வந்து 44 மாதங்கள் ஆகியும், இது குறித்து திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதோடு, காலி பணியிடங்களை நிரப்பாமல், ஊழியர்கள் மீது பணிச் சுமையைத் திணித்துக் கொண்டிருக்கிறது.
ஏழை, எளிய பின்புலத்தில் இருந்து வரும் குழந்தைகள், அடிப்படைக் கல்வியும், சிந்தனைத் திறனும் பெற வேண்டும், கல்வியில் சமவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டவை அங்கன்வாடி மையங்கள். இந்த அடிப்படைப் பயிற்சி கிடைக்கவில்லை என்றால், பள்ளிக் கல்வி கற்றலில் குழந்தைகள் பின்தங்கவும் வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.