விஜய் கட்சியுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி பதில்


திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக உறவு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் 171 நலிந்த நிலை தொழிலாளர்களுக்கு ரூ.1.71 கோடிக்கான காசோலையை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். அதனைதொடர்ந்து அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையில் 9 விளையாட்டு திடல்களை தனியார்மயமாக்கும் முடிவு கண்டிக்கத்தக்கது.அரசு தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே ஊதியம் வழங்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கும் தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. விஜய் தனது கருத்தை கூறியிருப்பது அவரது சுதந்திரம். தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் இருக்கிறது. விஜய் கட்சியுடன் கூட்டணி குறித்து தேர்தல் நெருங்கும்போது பேசுவதுதான் சரியாக இருக்கும்.

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கொள்கையே கிடையாது. திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுக ஒப்பந்தம் உள்ளதாக அனைவரும் பேசத்தொடங்கி விட்டனர். எம்.ஜி.ஆர் பெயரை சொன்னால்தான் அரசியல் செய்ய முடியும் என்ற சூழல் நிலவுகிறது என்றார்.


Next Story