அதிமுகவுடன் கூட்டணியா? - பாஜக மேலிட இணை பொறுப்பாளர் பதில்

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது என்று பாஜக மேலிட இணை பொறுப்பாளர் கூறினார்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழ்நாட்டில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் மக்களிடையே பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, மணல் கொள்ளை, ஊழல் என்று தொடர்ந்து நடந்து வருகிறது.
திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த எந்த வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி ஒவ்வொரு நாளும் பின்தங்கி வருகிறது. குறிப்பாக பொருளாதாரம், மாநில வளர்ச்சி எதுவுமே நடக்கவில்லை. மேலும் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கி வருகிறார்கள்.
திமுக அரசு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இதுவரை எத்தனை திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள், எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளது, அதில் குறிப்பாக மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட நிதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என அனைத்தையும் வெள்ளை அறிக்கையாக கொடுக்க தயாரா? அதிமுகவுடன் கூட்டணியா? என்பது குறித்து எதுவும் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் மேலிடம் அதற்கான விடையை தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.