சென்னையில் 21-ந் தேதி அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா: எடப்பாடி பழனிசாமி பங்கேற்பு
ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
சென்னை,
அ.தி.மு.க. தலைமைக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
அ.தி.மு.க. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக என்றென்றும் விளங்கி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிறிஸ்தவப் பெருமக்களை கவுரவிக்கும் விதமாக, கட்சியின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்தி வந்துள்ளார்கள்.
ஜெயலலிதாவை தொடர்ந்து அ.தி.மு.க. சார்பில், கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியும் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகின்றார்.
அந்த வகையில், இந்த ஆண்டு வருகின்ற 21-12-2024 சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில் சென்னை கீழ்பாக்கம் சி.எஸ்.ஐ. லைட் ஆடிட்டோரியத்தில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சியை நடத்த உள்ளார்.
இந்த நிகழ்ச்சியில், கிறிஸ்தவ பேராயர்கள், ஆயர்கள், போதகர்கள் மற்றும் கிறிஸ்தவப் பெருமக்களும், தலைமைக் கழக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.