டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம்: கனிமொழி விமர்சனம்
டங்ஸ்டன் விவகாரத்தில் அதிமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. அவை கூடியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பின்னர் மதுரை டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தி அரசின் தனித் தீர்மானத்தை அவை முன்னவர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் தெரிவித்தனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இடையே காரசாரமான விவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் கொண்டு வரப்பட்ட தனித் தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், இது குறித்து திமுக எம்.பி.கனிமொழி வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,
"மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பதோடு, தான் முதல்-அமைச்சராக இருக்கும் வரையில் இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டேன் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விவகாரத்தில் தற்போது மக்களோடு நிற்பது போல் நாடகமாடும் அதிமுக, நாடாளுமன்றத்தில் "சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா 2023" -க்கு ஆதரவளித்தது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதன் மூலம் அதிமுகவின் இரட்டை வேடம் மக்களிடத்தில் அம்பலமாகியுள்ளது." என்று தெரிவித்துள்ளார்.