ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல: டைரக்டர் அமீர்
செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது என்று டைரக்டர் அமீர் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் நேற்று நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "டாக்டர் அம்பேத்கர் பற்றிய புத்தகத்தின் வெளியீட்டு விழாவிற்கு கூட வி.சி.க. தலைவர் திருமாவளவனால் வர முடியாத அளவிற்கு அவருக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் அழுத்தம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது" என்று குறிப்பிட்டார்.
மேலும், "200 தொகுதிகளை வெல்வோம் என்று கூறும் ஆட்சியாளர்களை 2026 தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கிவிடுவார்கள்" என்று கூறிய விஜய், "வேங்கைவயல் ஊரில் என்ன நடந்தது என்று அனைவருக்கும் தெரியும். சமூகநீதி பேசும் இங்குள்ள அரசு அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோன்று எனக்கு தெரியவில்லை. இதையெல்லாம் அம்பேதகர் பார்த்தால் வெட்கப்பட்டு தலைகுணிந்துபோவார்" என்று விமர்சித்தார். அதே சமயம், விஜய்யின் பேச்சில் தனக்கு உடன்பாடு இல்லை என்று திருமாவளவன் கூறியுள்ளார். விஜய்யின் இந்த பேச்சு அரசியல் களத்தில் அனலைக் கிளப்பி உள்ளது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல என்று டைரக்டர் அமீர் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், பிறப்பால் ஒருவர் பணக்காரர் ஆகலாம். பணக்கார வாரிசுகளை மணப்பதாலும் ஒருவர் பணக்காரர் ஆகலாம். ஜனநாயக நாட்டில் மக்கள் ஆதரவு இல்லாமல் ஒருவர் முதல்-அமைச்சராகவே முடியாது. செல்வந்தர்களின் திடீர் அரசியல் பிரவேசம் என்றைக்குமே மக்களுக்கு நன்மை தராது. ஆதவ் அர்ஜுனாவின் நட்பு விஜய்யின் அரசியலுக்கு நல்லதல்ல என்று தெரிவித்துள்ளார்.