திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை: அமைச்சர் கே.என்.நேரு

திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்
சென்னை,
தமிழக சட்டசபையின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, திருப்பூரில் 1 லட்சம் டன் திடக்கழிவுகள் கொட்டி கிடப்பதாக தகவல் வருகிறது. எனவே அவற்றை அகற்ற அரசு வழிமுறைகளை செய்யுமா என்று சட்டமன்ற உறுப்பினர் கொங்கு ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் கோவையில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான குப்பைகளை கோவையில் இருந்து மட்டுமல்லாமல் அருகில் இருந்தும் கொண்டு செல்ல வேண்டும். கோவையில் தொடங்கும்போது திருப்பூரில் உள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி நகராட்சியில் கழிவுகளை கொட்ட நிரந்தரமாக இடம் தேர்வு செய்து தர அரசு முன்வருமா என்று கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு, ஏற்கனவே அங்கு 4 ஏக்கரில் குப்பை கொட்டும் இடத்தில் பயோ மைனிங் முறையில் குப்பை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் குப்பைகளை ஊருக்கு வெளியே கொட்டும் வகையில் இடம் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.