ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்


ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கையா..? - வி.சி.க. தலைவர் திருமாவளவன் பதில்
x
தினத்தந்தி 7 Dec 2024 6:22 AM IST (Updated: 7 Dec 2024 12:32 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் தங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருப்பதாக திருமாவளவன் தெரிவித்தார்.

திருச்சி,

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இன்று இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு... கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்' என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்த கருத்துக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக நேற்று திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், "தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், அம்பேத்கர் நினைவு நாளில் அம்பேத்கர் தொடர்பான நூலை வெளியிட்டு இருப்பதும், அம்பேத்கரைப் பற்றி பேசி இருப்பதும் பெருமை அளிக்கிறது. பொது நீரோட்டத்தில் அம்பேத்கர் வெகுவாக பேசப்படுகிறார். அந்த வரிசையில் 'எல்லோருக்குமான தலைவர்' என்ற நூலை வெளியிட்டிருப்பது வரவேற்பு மற்றும் பாராட்டுக்கு உரியது.

தி.மு.க. தலைமையிலான கூட்டணி கட்சிகள் அழுத்தம் என்ற கருத்தை அவர் பதிவு செய்திருக்கிறார். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. அப்படி எந்த அழுத்தமும் இல்லை என்பதை நான் தெளிவுபடுத்தி இருக்கிறேன். அழுத்தம் கொடுத்து அதற்கு இணங்க கூடிய அளவுக்கு நானும், விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பலவீனமாக இல்லை என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன்.

இந்த நிகழ்வில் நான் பங்கேற்காமல் போனதற்கு, விஜய் காரணம் இல்லை. அவருக்கும் எங்களுக்கும் எந்தவிதமான சிக்கலும் இல்லை. ஆனால் எங்கள் இருவரையும் வைத்து விஜய் - திருமா ஆகியோர் மேடையில் ஏறப்போகிறார்கள் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படாத நிகழ்வை அரசியல் சாயம் பூசி உள்ளனர். அவர்கள் எந்தப் பின்னணியில் இயங்குகிறார்கள் என்று கருத்துகளை முன்வைத்தது முக்கியமான ஒன்று.

ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலம் தேர்தல் களத்தில் நாங்கள் நிற்கிறோம். ஓரளவு எங்களாலும் யூகிக்க முடியும். யார் எந்த பின்னணியில் இயங்குகிறார்கள், பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியும். அந்த வகையில் தான் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவை அரசியலாக்கி விடுவார்கள். அப்படி அரசியல் படுத்துவதை நான் விரும்பவில்லை. இந்த அடிப்படையில் தான் தனியார் புத்தக வெளியீட்டாளர் நிறுவனத்திடம் தெரிவித்துள்ளேன்.

விஜய் மீது எந்த வருத்தமும் இல்லை. தமிழகத்தில் எங்களை வைத்து காய் நகர்த்துகின்ற அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. அவருக்கு வாழ்த்துகள். நான் சுதந்திரமாக, விடுதலை சிறுத்தைகள் கூட்டணிக்கு எந்த பாதகமும் ஏற்படாத வகையில் எடுத்த முடிவு. இதில் எந்த அழுத்தமும் இல்லை. விஜய் சொல்லி இருக்கக்கூடிய கருத்துக்கு அவர் மட்டுமே பொறுப்பு. ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு சுதந்திரம் இருக்கிறது. அம்பேத்கர் பற்றி இன்று எல்லோரும் பேசுவது மகிழ்ச்சியளிக்கிறது.

ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு அவரே பொறுப்பு. கட்சி பொறுப்பல்ல. அது அவருடைய தனிப்பட்ட கருத்து. தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் வி.சிக. அங்கம் வகிக்கிறது. இந்தநிலையில் தி.மு.க. கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் ஆதவ் அர்ஜுனா கருத்து கூறியிருப்பது உண்மை. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்போம். உரிய விளக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்ப்போம். அதன்பிறகு இயக்க முன்னணி தோழர்களோடு கலந்து பேசி முடிவெடுப்போம்" என்று அவர் கூறினார்.


Next Story