தஞ்சாவூரில் கொலை நடந்த பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் விடுமுறை


தஞ்சாவூரில் கொலை நடந்த பள்ளிக்கூடத்துக்கு ஒரு வாரம் விடுமுறை
x

தஞ்சாவூரில் அரசு பள்ளிக்கூடத்தில் புகுந்து ஆசிரியை குத்திக்கொலை செய்யப்பட்டார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியை ரமணி அவரது காதலர் மதன்குமாரால் குத்தி கொலை செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதன்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ரமணியின் உடல் அவரது சொந்த ஊரான சின்னைமனைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன் ஆகியோர் நேரில் சென்று ரமணியின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மேலும் ரமணியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இதையடுத்து அமைச்சர்கள் அன்பில் மகேஷ், கோவி.செழியன் ஆகியோர் கொலை நடந்த பள்ளிக்கு சென்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நடக்கக்கூடாத ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது. வேதனைக்குரிய நாளாக அமைந்து விட்டது. மீண்டும் பள்ளிக்கு வரும்போது பிள்ளைகளுக்கு பயஉணர்வு இருக்கக்கூடாது என்பதற்காக உடனடியாக இந்த வாரம் முழுவதும் பள்ளிக்கு விடுமுறை விட சொல்லி இருக்கிறேன்.

25-ந் தேதி (திங்கட்கிழமை )பிள்ளைகளுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் ஒரு கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். ஆசிரியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அரசு ஊழியர்கள் பாதுகாப்பு சட்டத்தை வலுப்படுத்த சட்டத்துறையில் பேசி நல்ல நடவடிக்கை முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story