களத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. பற்றி பேசுகிறார்: விஜய் குறித்து அமைச்சர் சேகர் பாபு விமர்சனம்
தமிழக முதல்-அமைச்சரின் ஆட்சி நீதி தேவதையின் ஆட்சி என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், "விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் இன்று இந்நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு... கூட்டணி கட்சிகளால் அவருக்கு (திருமாவளவன்) எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், அவருடைய மனது முழுக்க முழுக்க நம்முடன்தான் இருக்கும்.
மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத, அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய இயலாத கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் இருநூறு வெல்வோம் என எகத்தாளம் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடும் எச்சரிக்கை, நீங்கள் உங்கள் சுயநலனுக்காகப் பல வழிகளில் பாதுகாத்துவரும் கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் 2026-ல், மக்களே மைனசாக்கி விடுவார்கள்" என்று அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் 200 தொகுதிகளை அல்ல... 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும் என்று தவெக தலைவர் விஜய்-யின் கருத்துக்கு அமைச்சர் சேகர் பாபு பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் கருணை இல்லங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவில் பேசிய அவர், "200 என்ற நம்பிக்கை வீணாகும் என்று சிலர் அதிமேதாவிகளாக, தற்குறிகளாக களத்திற்கே வராத ஒருவர் தி.மு.க. குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 200 அல்ல 234 தொகுதிகளையும் தி.மு.க. கைப்பற்றும். வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக, தி.மு.க. மீது எப்படியெல்லாம் இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுகிறதோ, அப்போதெல்லாம் 80கிமீ வேகத்தில் பயணிக்கும் தி.மு.க. தொண்டன் 100 கி.மீ. வேகத்தில் பயணிப்பான். மீண்டும் முதல்-அமைச்சர் ஸ்டாலினை அரியணை ஏற்றும் வரை எங்களுடைய வேகம் குறையாது.
தமிழக முதல்-அமைச்சரின் ஆட்சி நீதி தேவதையின் ஆட்சி. தவறு செய்வோருக்கு தண்டனை பெற்றுத் தரக்கூடிய ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்கள் நிலைப்பாடு. தி.மு.க. அரசின் திட்டங்கள் இந்தியா மற்றும் உலகிற்கே வழிகாட்டும் திட்டங்களாக உள்ளது. புதுமைப்பெண் திட்டம், மகளிர் விடியல் பயணம் என்று பல திட்டங்களை அரசு செயல்படுத்துகிறது" என்று அமைச்சர் சேகர் பாபு கூறினார்.