நெல்லை அருகே பாதயாத்திரை சென்ற சிறுவன் பேருந்து மோதி உயிரிழப்பு
நெல்லை அருகே திருச்செந்தூருக்கு பாதயாத்திரை சென்ற சிறுவன் பேருந்து மோதி உயிரிழந்தார்.
மானூர்,
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தளவாய்புரம் அருகில் உள்ள நல்லமங்கலம் என்ற ஊரைச்சேர்ந்தவர் வேல்முருகன். இவருடைய மகன் சண்முகநாதன் (வயது 16). அங்குள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். முருக பக்தரான இவர், மாலை அணிந்து திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
நேற்று அதிகாலையில், நெல்லை - சங்கரன்கோவில் பிரதான சாலையில், மானூர் அருகே உள்ள ரஸ்தா பகுதியில் சென்றபோது, அந்த வழியாக காசிப்பாண்டி என்பவர் ஓட்டி வந்த அரசு பேருந்து எதிர்பாராமல் சண்முகநாதன் மீது பின்னால் மோதியது. இதில் தலையில் படுகாயமடைந்த சண்முகநாதனை அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.