அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறாததால் 9-ம் வகுப்பு மாணவன் தற்கொலை
அரையாண்டு தேர்வில் முதல் மதிப்பெண் பெறாததால் 9-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
கோவை,
கோவை அருகே உள்ள வடவள்ளி மகாராணி அவென்யூ நகரை சேர்ந்தவர் பியூலா. இவருடைய மகன் சசீந்திரா(வயது 14). இவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நன்றாக படித்து வந்த சசீந்திரா வகுப்பில் எப்போதுமே முதல் மதிப்பெண் எடுப்பது வழக்கம். அதன்படி, கடந்த மாதம் நடந்த அரையாண்டு தேர்வை சசீந்திரா நன்றாக எழுதி இருந்தான்.
விடுமுறை முடிந்து கடந்த வாரம் பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது. அங்கு சென்றதும் அரையாண்டு தேர்வு விடைத்தாள் திருத்தி வழங்கப்பட்டது. தொடர்ந்து மதிப்பெண் அட்டையும் வழங்கப்பட்டது. வழக்கமாக தேர்வில் முதலிடம் பிடிக்கும் சசீந்திராவுக்கு, அரையாண்டு தேர்வில் 2-ம் இடம்தான் கிடைத்தது. பள்ளியிலேயே எப்போதும் முதல் இடத்தில் வரும் சசீந்திரா, இந்த முறை 2-வது இடத்துக்கு வந்ததால் மனம் உடைந்தான். இது குறித்துதனது நண்பர்களிடம் கூறி அழுது புலம்பினான்.
வீட்டுக்கு சென்ற அவன் தனது தாயாரிடமும் அதுபற்றி கூறி அழுது இருக்கிறான். அவனுக்கு, தாயார் ஆறுதல் கூறினார். இருந்தபோதிலும் சசீந்திரா தனது நண்பர்கள் மற்றும் உடன் படித்தவர்களுடன் சரியாக பேசவில்லை. தனது தாயாருடனும் சரியாக பேசாமல் தனியாகவே இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல அவன் பள்ளிக்கு சென்றான். பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததும், அவனுடன் தாயார் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பின்னர் அவனுக்கு காபி போட்டு கொடுப்பதற்காக பால் வாங்க கடைக்கு சென்றார். பின்னர் பால் வாங்கிவிட்டு அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அங்கு வழக்கமாக இருக்கும் இடத்தில் சசீந்திரா இல்லை. உடனே அவனின் பெயரை சொல்லி அழைத்தபடி பியூலா தேடினார்.
படுக்கை அறைக்கு சென்றபோது அங்கு சசீந்திரா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்ததுடன் கதறி துடித்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் சசீந்திராவை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே சசீந்திரா உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சசீந்திராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வகுப்பில் எப்போதுமே முதல் மதிப்பெண் எடுக்கும் சசீந்திரா அரையாண்டு தேர்வில் 2-வது இடம் வந்ததால் மன அழுத்தத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.