சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த 7 விமானங்கள்
சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சென்னையில் தரையிறங்க முடியாமல் 7 விமானங்கள் வானில் வட்டமடித்தன.
சென்னை,
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (புதன்கிழமை) முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரம் அடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சென்டிரல், எழும்பூர், புரசைவாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், மெரினா, சைதாப்பேட்டை, சின்னமலை, ஈக்காட்டுத்தங்கல், அசோக் பில்லர், கிண்டி, ராயப்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், அடையாறு, தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பாலவாக்கம்,பெருங்களத்தூர், வண்டலூர், கிளாம்பாக்கம், ஆலந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த மழையால் மதுரவாயலில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலையில் நெற்குன்றம்- மதுரவாயல் இடையே 3 கி.மீ.க்கு வாகனங்கள் அணிவகுப்பு நின்றன. மதுரவாயல், ஆலப்பாக்கம் சிக்னலில் வாகனங்கள் நெரிசலால் பணிக்கு செல்வோர் சற்று அவதி அடைந்தனர். அதைபோல் மழை காரணமாக கத்திப்பாரா பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. தோகா, மலேசியா, புவனேஸ்வர், மும்பை, டெல்லி உள்பட 7 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன. சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக தரையிறங்கின. மேலும் துபாய், சிங்கப்பூர், மதுரை, தூத்துக்குடி, துர்காபூர், டெல்லி, கோவை, சிலிகுரி, புனே விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன. டெல்லி விமானம் சென்னையில் தரையிறங்க முடியாததால் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டது.