அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு

அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தாள்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா எப்ேபாதும் வென்றான் அருகே உள்ள ஆதனூர் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 40). கூலித்தொழிலாளி இவரது மனைவி பேச்சியம்மாள். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இதில் 2-வது மகள் மாளவிகா (11). இவள் காட்டு நாயக்கன்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.
மாளவிகாவுக்கு வீட்டில் சமைக்க வைத்திருக்கும் அரிசியை சாப்பிடும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 27-ந் தேதி காலையில் பள்ளிக்கூடத்திற்கு புறப்படும் போது, அரிசியை சாப்பிட்டு சென்றாள். மதியம் அவளுக்கு திடீரென்று உடல் சோர்வு ஏற்பட்டது. இதனால் அவளை, ஆசிரியர்கள் அங்குள்ள டேபிளில் படுக்க வைத்தனர்.
பின்னர் இதுகுறித்து அதே பள்ளியில் படிக்கும் அவளது அக்காளை அழைத்து தெரிவித்தனர். மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் 2 பேரும் ஆட்டோவில் வீட்டிற்கு புறப்பட்டனர். வீட்டிற்கு சென்ற உடன் மாளவிகா திடீரென்று மயங்கி கீழே விழுந்தாள். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவளை மீட்டு ஆட்டோவில் ஏற்றி சிகிச்சைக்காக எப்போதும் வென்றான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல டாக்டர்கள், அறிவுறுத்தினர். இதையடுத்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அதே ஆட்டோவில் மாளவிகாவை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.
அங்கு அவளை பரிசோதித்த டாக்டர்கள், மாளவிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்டது செரிமானம் ஆகாததால் மாளவிகா உயிரிழந்தது தெரியவந்தது. மேலும். ஆம்புலன்சில் கொண்டு வந்திருந்தால் அவளை காப்பாற்றி இருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியதாக குடும்பத்தினர் தெரிவித்து, கதறி துடித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக அரிசி சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.