மதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.3 லட்சம் பணம் பறிப்பு - 5 பேர் கைது
மதுரையில் போலீஸ் போல் நடித்து பணம் பறித்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கரட்டுகாட்டைச் சேர்ந்த சிவசுப்பிரமணி என்பவரிடம், பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மதுரை சொக்கிக்குளத்தை சேர்ந்த முத்துகுமார் என்பவர் தெரிவித்துள்ளார். இதனை நம்பி காரில் 3 லட்சம் பணத்துடன் சிவசுப்பிரமணி மதுரை வந்துள்ளார். அவரை மாநகராட்சி நீச்சல்குளம் பகுதிக்கு அழைத்துச்சென்ற முத்துக்குமார் காரில் இருந்தவாறு பண விபரங்களை கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அந்த இடத்திற்கு வந்த 2 பேர், தங்களை போலீஸ் என அறிமுகப் படுத்திக்கொண்டு காரில் சோதனை செய்தனர்.
இதனால் பயந்தது போல நடித்த முத்துக்குமார், பணப்பையை வாங்கி கொண்டு அங்கு தயாராக நின்ற இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில், ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவசுப்ரமணி தல்லாகுளம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி பணத்தை பறித்த முத்துக்குமார், அவரது கூட்டாளிகளான பதினெட்டாம்படி, முருகபாண்டி, பாலசுப்பிரமணியன், அழகேசன் ஆகிய 5 பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர். உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து பணத்தை மீட்ட போலீசாருக்கு காவல் ஆணையர் லோகநாதன் பாராட்டு தெரிவித்தார்.