சுகாதாரமற்ற குடிநீரால் மக்களின் உயிரோடு விளையாடுவதா? எடப்பாடி பழனிசாமி கண்டனம்
முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை,
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 3 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை. புயல் கரையைக் கடந்ததும், குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும்.
மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்து, தமிழ்நாடு முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு ஸ்டாலினின் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.