'சிக்கன் ரைஸ்' சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி


சிக்கன் ரைஸ் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
x

‘சிக்கன் ரைஸ்’ சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரபாகர். அவருடைய மனைவி அமுதா. இவர்களுடைய மகள் நீலாம்பரி. இவர்கள் 3 பேரும் நேற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்ட அவர்களிடம் டாக்டர்கள் விசாரித்தனர்.

அப்போது கடந்த 21-ந் தேதி இரவு கருங்கல்பாளையத்தில் இயங்கி வந்த ஒரு ஓட்டலில் 'சிக்கன் ரைஸ்' வாங்கி, 3 பேரும் பகிர்ந்து உண்டதும், மறுநாள் முதல் கடுமையான வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், அவர்கள் 3 பேரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் உடல்நலம் சரியாகவில்லை. இதையடுத்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அதிகாரி டாக்டர் தங்கவிக்னேசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கேசவராஜ், செல்வன், அருண்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட 3 பேரிடமும், அரசு மருத்துவமனை டாக்டர்களிடமும் விவரத்தை கேட்டு அறிந்தனர். பின்னர் கருங்கல்பாளையத்துக்கு சென்று குறிப்பிட்ட ஓட்டலில் சோதனை நடத்தினர்.

அப்போது உணவக சமையல் அறை சுகாதாரமற்ற முறையில் இருந்ததும், சரியான பராமரிப்பு இல்லாமல் இருந்ததையும் அதிகாரிகள் கண்டறிந்தனர். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) உரிமம் பெறாமல் இயங்கியதும், இறைச்சி மற்றும் மூலப்பொருட்கள் வாங்கியதற்கான ரசீது, கழிவு எண்ணெய் தொடர்பான நடைமுறைகள், உணவு கையாளுவதற்கான மருத்துவ தகுதி சான்று என எந்த முறையான ஆவணங்கள் இல்லாததும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஓட்டல் தற்காலிகமாக மூடப்பட்டது.


Next Story