தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு: அமைச்சர் சேகர்பாபு

தமிழகத்தில் இதுவரை 2,630 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்துள்ளது என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தங்கசாலையில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த அல்லூரி வெங்கடாத்திரி சுவாமி மடம் (எ) ராமர் கோவிலுக்கு மீண்டும் குடமுழுக்கு நடத்த ரூ.26.43 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணிகள் நிறைவு பெற்று இன்று வேத மந்திரங்கள் முழங்க குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார்.
பின்னர், அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இன்று வரை 2,634 கோவில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளன. இன்று மட்டும் தஞ்சாவூர் மாவட்டம், புதுசத்திரம், காளியம்மன் கோயில், கோவை மாவட்டம், சரவணம்பட்டி, ரத்தினகிரி மருதாசலக்கடவுள் கோயில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூர், பரமசிவன் கோயில் என 14 கோவில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஸ்ரீதர், சென்னை மண்டல இணை ஆணையர் முல்லை, உதவி ஆணையர் சிவக்குமார், மாநகராட்சி மண்டலக்குழுத் தலைவர் ராமுலு, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் முரளி, அப்பாரஞ்சி, இறையன்பர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.