திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற பெண்ணிடம் கைப்பையை பறித்த 2 பேர் கைது
திருவண்ணாமலையில் தினமும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். இந்த நிலையில் நேற்று பகலில் கிரிவலம் சென்ற பெண் ஈசான்ய லிங்கம் அருகில் வரும் போது அவரது பின்னால் வந்த 2 நபர்கள் அந்த பெண்ணின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓட முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் சுற்றிவளைத்து பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவர்கள் இருவரையும் பொதுமக்கள் திருவண்ணாமலை கிழக்கு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள் வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த சிவா, மணி என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.