பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்


பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2024 11:41 AM IST (Updated: 30 Dec 2024 12:38 PM IST)
t-max-icont-min-icon

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்க வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வரும் 2025 தமிழ் புத்தாண்டு பொங்கல் திருநாளில் தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு கொண்ட பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வழக்கமாக வழங்கப்படும் ரொக்கத் தொகை குறித்து எப்போது அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் "மத்திய அரசு போதிய நிதி ஒதுக்காததால், இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை வழங்கப்படாது" என்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மத்திய பாஜக அரசு கடந்த 2021-ம் ஆண்டு புதிய ஆட்சி அமைந்தது முதல் நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டி வருகிறது என்பதுடன் தமிழ்நாட்டை வஞ்சித்து வருவது உண்மையாகும்.

இயற்கை பேரிடர்களால் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வரும் தமிழ்நாட்டில் நிவாரண பணிகளுக்கும், மக்கள் மறு வாழ்வை உறுதி செய்யவும் 2021 முதல் இதுவரை ஏற்பட்ட பேரிடர் பாதிப்புகளுக்கு ரூ.82 ஆயிரத்து 458 கோடி வழங்க வேண்டும் என பாஜக அரசிடம் தமிழ்நாடு அரசு கோரியுள்ள நிலையில், அது ரூ 276 கோடி மட்டுமே வழங்கியிருப்பது எவ்வளவு பெரிய ஏமாற்றம் அளிக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள்.

பொங்கல் திருநாளில் பரிசுத் தொகுப்புடன் மட்டுமே நிறுத்திக் கொள்வது ரொக்க தொகை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, நிதி அமைச்சரின் முடிவின் மீது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு மறுபரிசீலனை செய்து, பொங்கல் திருநாளில் வழங்கப்படும் பரிசுத் தொகுப்புடன் ரொக்கத் தொகை குடும்பத்திற்கு தலா ரூ.1,000 வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story