16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது - போலீசார் தீவிர விசாரணை
கோவை அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவை,
திண்டுக்கல் அருகே உள்ள 16 வயதான சிறுமி 9-ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வருகிறார். இவருக்கும் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமியின் உறவினரான 23 வயதான வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறியது. இதன் காரணமாக 2 பேருமே அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.
அவர்களின் காதல் விவகாரம் 2 குடும்பத்தினருக்கும் தெரியவந்தது. 2 பேருமே நெருங்கிய உறவினர்கள் என்பதால் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
அந்த வாலிபர் கோவையில் வேலை செய்து வருவதால், 2 பேருக்கும் கோவை அருகே உள்ள ஒரு கிராமத்தில் இருக்கும் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் திருமணம் நடந்தது. இது குறித்து குழந்தைகள் நல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து, போலீசாருடன் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர்.
ஆனால் அதற்குள் அந்த சிறுமியின் கழுத்தில் அந்த வாலிபர் தாலி கட்டிவிட்டார். அந்த சிறுமிக்கு 16 வயதே ஆவதால் இந்த திருமணம் செல்லாது என்பதால், அந்த சிறுமி மற்றும் வாலிபரை போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். அந்த வாலிபர் மீது குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தொடர்ந்து அந்த சிறுமியை காப்பகத்தில் ஒப்படைப்பதா? அல்லது பெற்றோருடன் அனுப்பி வைப்பதா என்பதை கோர்ட்டில் ஆஜர்படுத்தி முடிவு செய்ய உள்ளனர். திருமண வீட்டில் சிறுமியின் கழுத்தில் தாலி கட்டிய கையோடு, 2 பேரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், திருமண மண்டபமே களை இழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.