முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதி மந்திரி பதில் சொல்வாரா..? - ப.சிதம்பரம் கேள்வி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதி மந்திரி பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட பணிகளுக்கான நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யாததை கண்டித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், "கடந்த மூன்று ஆண்டுகளாக மெட்ரோ ரெயில் திட்டத்தில் ஒரு ரூபாய் கூட விடுவிக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. தமிழ்நாடு அரசுதான் இந்த திட்டத்தை முடுக்கிவிட்டு செயல்படுத்தி வருகிறது. இது குறித்து கேட்டால், சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டம் என்பது மாநில அரசினுடையது என்று நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறார்கள். அப்படியெனில் ரெயில்வே துறையை மாநில அரசுக்கு கொடுத்துவிடுவார்களா..? இந்த பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான ஒப்புதல் குறித்து மத்திய அரசு மூச்சு கூட விடவில்லை. ஆனால் பல மாநிலங்களில் இதை விட சிறிய நகரங்களில் மெட்ரோ ரெயில் சேவைக்கு அனுமதி வழங்கி நிதி வாரி வழங்கப்பட்டிருக்கிறது. இது எந்த விதத்தில் நியாயம்" என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் சொல்லக் கடமைப்பட்டிருப்பதாக முன்னாள் மத்திய நிதிமந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், "1-2-2021 அன்று மத்திய அரசின் 2021-22 ஆண்டுக்கான வரவு-செலவு அறிக்கையை இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
அப்பொழுது அவர் ஆற்றிய உரையின் பத்தி 59ல் குறிப்பிட்டது: "ரூ 63,246 கோடி செலவில் நிறைவேற்றப்படும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு நிதி (counterpart funding) வழங்கப்படும்"
நேற்று பேசிய தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதுவரை மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கு ஒரு ரூபாய் கூடத் தரவில்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்
முதல்-அமைச்சரின் கூற்றுக்கு மத்திய அரசு -- குறிப்பாக இந்திய நிதி மந்திரி -- பதில் சொல்லக் கடமைப் பட்டிருக்கிறார் என்று கருதுகிறேன்" என்று அதில் ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.