அனைவரையும் சமமாக நடத்த மறுப்பது ஏன்? விஜய்க்கு எல்.முருகன் கண்டனம்
சென்னையில் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
சென்னை,
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை இணை மந்திரி எல்.முருகன் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
திருப்பதி கோவில் லட்டு பிரசாதம் விவகாரம் பக்தர்களை புண்படுத்தி உள்ளது. ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிகாலத்தில் திருப்பதி கோவிலில், தொடர்பு இல்லாதவர்களும் டிரஸ்டிகளாக நியமிக்கப்பட்டார்கள்.இதனால்தான் பல பிரச்சினைகள் எழுந்தன. தமிழகத்தில் அம்மா உணவக திட்டம் தொடர்வது ஏழை, எளிய மக்களுக்கு நன்மையை அளிக்கும்.
தமிழகம் உள்பட நாடுமுழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. நடிகர் விஜய் கட்சித் தொடங்கிய முதல் விழாவாக விநாயகர் சதுர்த்தி இருந்தது. அவர், விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிப்பார் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், வாழ்த்து சொல்லவில்லை. பெரியார் பிறந்த நாளில் அவரது நினைவிடத்தில் நேரில் மரியாதை செலுத்தி உள்ளார். இதில், யாரும் தலையிடவிரும்பவில்லை. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து சொல்லாதவர், எப்படி பொதுவான நபராக இருக்க முடியும் என்பது எங்கள் கருத்து. என தெரிவித்துள்ளார்