நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது


நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு... மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103 அடியை தாண்டியது
x
தினத்தந்தி 27 July 2024 4:01 PM GMT (Updated: 27 July 2024 4:19 PM GMT)

தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.1 அடியை தாண்டி உள்ளது.

மேட்டூர்,

கர்நாடக, கேரள மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகள் நிரம்பின. இதையடுத்து கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1 லட்சத்து 981 கன அடியும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 33ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 983 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடியை தாண்டியது. இதனால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளை மூழ்கடித்தவாறு தண்ணீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேட்டூர் அணை

இதனிடையே கர்நாடக அணைகளில் திறந்து விடப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து அடைகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.41 லட்சம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 28,000 கன அடி நீர் மட்டுமே வந்த நிலையில், தற்போது 1.41 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் கர்நாடக அணைகளில் இருந்து அதிகப்படியான தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென்று உயர்ந்து வருகிறது. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் தனது முழு கொள்ளளவை எட்ட உள்ளது.

இந்நிலையில் தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது 103.1 அடியை தாண்டி உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,23,184 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், வினாடிக்கு 1,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


Next Story