திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதல்-அமைச்சர் பெருமிதம்


திமுக ஆட்சியில் விக்கிரவாண்டி தொகுதி முன்னேற்றம் கண்டுள்ளது: முதல்-அமைச்சர் பெருமிதம்
x
தினத்தந்தி 8 July 2024 6:07 AM GMT (Updated: 8 July 2024 6:22 AM GMT)

விக்கிரவாண்டி தொகுதியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை,

விழுப்புரம் மாவட்டத்திலும், விக்கிரவாண்டி தொகுதியிலும் கடந்த 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது;

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 63 ஆயிரத்து 168 மாணவர்களும், விக்கிரவாண்டியில் 10,651 மாணவர்களும் சூடான, சுவையான சிற்றுண்டி உட்கொண்டு கல்வியைத் தொடர்கின்றனர். முதல்வரின் முகவரி திட்டத்தில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 223 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, 1 லட்சத்து 24 ஆயிரத்து 356 மனுக்களுக்கும், விக்கிரவாண்டியில் 21,093 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு பொதுமக்கள் பயன் பெற்றுள்ளனர்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் 1 லட்சத்து 29 ஆயிரத்து 29 மாணவ, மாணவியர்கள் சேர்க்கப்பட்டு, 7 ஆயிரத்து 750 பெண் தன்னார்வலர்கள் மூலம் பயன் பெறுகின்றனர். விக்கிரவாண்டியில் 328 மாணவ மாணவியர் 83 தன்னார்வலர்கள் மூலம் பயனடைகின்றனர். மகளிருக்குக் கட்டணமில்லா விடியல் பேருந்து பயணத் திட்டத்தில் 6 கோடியே, 92 லட்சத்து 89 ஆயிரத்து 206 முறையும், விக்கிரவாண்டியில் 3 கோடியே 89 லட்சத்து 96 ஆயிரத்து 648 முறையும் மகளிர், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் பயணம் செய்துள்ளனர்.

நான் முதல்வன் திட்டத்தில் 39,186 இளைஞர்கள் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 257 குடும்பத் தலைவிகளும், விக்கிரவாண்டியில் 53 ஆயிரத்து 375 குடும்பத் தலைவிகளும் மாதம் 1,000 ரூபாய் பெற்று மகிழ்கின்றனர். 5 பவுன் நகைக்கடன் தள்ளுபடித் திட்டத்தில் ரூ.90.13 கோடி நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு 20,799 குடும்பங்களும், விக்கிரவாண்டியில் ரூ.8.50 கோடி ரூபாய் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு 1,633 குடும்பங்களும் பயனடைந்துள்ளன.

இப்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இந்தியாவில் தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேற்றம் கண்டு சிறந்த மாநிலமாகத் திகழ்வதுபோல், தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்திலும் சிறப்பான பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால், இம்மாவட்டம் முன்னேற்றத் திசையில் நடைபோடுகிறது. விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியும் சிறப்பான முன்னேற்றம் கண்டுள்ளது"

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story