ஆரணி அருகே வேன் டயர் வெடித்து விபத்து: ஒரு வயது குழந்தை உயிரிழப்பு, 22 பேர் காயம்


ஆரணி அருகே வேன் டயர் வெடித்து விபத்து: ஒரு வயது குழந்தை உயிரிழப்பு, 22 பேர் காயம்
x
தினத்தந்தி 26 Aug 2024 5:07 PM IST (Updated: 26 Aug 2024 5:36 PM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்ததில் ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக புதுச்சேரி பிரத்தியங்கிரா தேவி கோவிலுக்கு 3 வேனில் பக்தர்கள் சென்றனர். இந்த நிலையில் விண்ணமங்கலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது கடைசியாக சென்ற வேனின் பின்பக்க டயர் வெடித்தது. இதில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடராஜன் என்பவரது ஒரு வயது குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

மேலும் இந்த விபத்தில் 10 பெண்கள் உட்பட 22 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஒரு குழந்தை மற்றும் 4 பெண்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story