கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்: விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு


கள்ளக்குறிச்சியில் தொடரும் சோகம்: விஷ சாராயத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 35 ஆக உயர்வு
x
தினத்தந்தி 20 Jun 2024 12:07 AM GMT (Updated: 20 Jun 2024 5:55 AM GMT)

கள்ளச்சாராயம் குடித்ததில் 35 பேர் உயிாிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் நேற்று முன்தினம் சாராயம் விற்பனை நடந்துள்ளது. சாராயத்தை வாங்கி குடித்த பலருக்கு நள்ளிரவில் இருந்து கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன.

பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக வந்தனர். நேற்று காலையில் இருந்து சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

அதன்படி கருணாபுரத்தை சோ்ந்த கணேசன் மகன் பிரவீன், சிவா (32), மகேஷ் (60), ஜெகதீசன் (70), ஏசுதாஸ் (36), கண்ணன் (70), குரு (48), மணி (48), சங்கா் (35), பொியசாமி (40), சுப்பிரமணியன் (56), பரமசிவம் (56), குரு (44), செந்தில், சுரேஷ், குப்பன் மனைவி இந்திரா, சுரேஷ் மனைவி வடிவு (35), ரஞ்சித்குமாா் (37), கிருஷ்ணமூா்த்தி உள்பட 45-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் மகேஷ், ஜெகதீசன், ஏசுதாஸ், கண்ணன், குரு, மணி, சங்கா் உள்பட 19 பேர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். சிலர் சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் கருணாபுரம் சிறுவங்கூா் ரோட்டை சோ்ந்த தா்மன் மகன் சுரேஷ் (வயது 46) கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

பலியானவர்கள் விவரம்

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

1. கருணாபுரம் சிறுவங்கூர்ரோடு தா்மன் மகன் சுரேஷ் (வயது 46)

2. கணேசன் மகன் பிரவீன் (29)

3. கடலூா் மாவட்டம் பண்ருட்டி ஆண்டிக்குப்பத்தை சோ்ந்த ராஜேந்திரன் மகன் சுரேஷ் (40).

4. கருணாபுரம் கிழக்கு தெருவை சோ்ந்த சேகா் (65).

5. கிருஷ்ணமூர்த்தி(62)

6. மணி(58)

7. குப்பன் மனைவி இந்திரா(48)

8. கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (35)

9. தனகோடி (55)

10. சுப்பிரமணி(60)

11. மாதவச்சேரியை சேர்ந்த நாராயணசாமி (65)

12. வாய்க்கால் மேடு ராமு (50)

13. ஏமேப்பேர் ஆறுமுகம் (75)

ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் பலரது நிலைமை மோசமாக இருப்பதால், பலியானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் விஷ சாராயத்துக்கு பலி எண்ணிக்கை தற்போது35ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக சம்பவம் பற்றி அறிந்ததும் சுகாதாரத்துறையினா் மற்றும் வருவாய்த்துறையினா் கருணாபுரத்துக்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதற்கிடையே விஷ சாராய இறப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், "கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் கருணாபுரம் காலனியைச் சேர்ந்த 26 பேர் வாந்தி வயிற்றுவலி, வயிற்றெரிச்சல் போன்ற உபாதைகள் இருப்பதாக தெரிவித்து, கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

போலீஸ் துறை மற்றும் வருவாய்த் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் பாக்கெட் சாராயத்தை அருந்தியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

காரணம் என்ன?

அவர்களில் பிரவீன்குமார் (வயது 26) நேற்று முன்தினம் அதிகாலை 3 மணியளவில் வயிற்று வலியின் காரணமாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் சுரேஷ் (40), சேகர் (59) ஆகியோரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் அவர்களின் உடல்கள், உடல் கூராய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இறப்பின் காரணம், உடல் கூறாய்விற்கு பின்பு தெரியவரும்.

அந்த 26 பேரில், வடிவு மற்றும் கந்தன் ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்ட நிலையில், மற்ற அனைவருக்கும் கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இருந்து 4 சிறப்பு டாக்டர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்த டாக்டர் குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல், சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும், சிறப்பு டாக்டர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

18 பேர் ஆம்புலன்ஸ்கள் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 6 பேருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன.

மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.

மேலும், பாக்கெட் சாராயம் விற்ற கோவிந்தராஜ் என்கிற கண்ணுகுட்டி (49), போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டு, அவை விழுப்புரம் மண்டல தடய அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டது. சோதனையில், அதில் மெத்தனால் கலந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

முதல்-அமைச்சருக்கு இந்த சம்பவம் பற்றிய தகவல் தெரிய வந்ததுடன், உடனடியாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோரை உடனடியாக கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று, சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் ஜடாவத் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக எம்.எஸ்.பிரசாந்த் புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சமய் சிங் மீனா தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, அந்த இடத்தில் ரஜத் சதுர்வேதி பணியமர்த்தப்பட்டுள்ளார்.

சி பி சி ஐ டி க்கு மாற்றம்

அதோடு, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் பாரதி மற்றும் அப்பகுதி இன்ஸ்பெக்டர் ஆனந்தன், சப்-இன்ஸ்பெக்டர் ஷிவ்சந்திரன், போலீஸ் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ், திருக்கோவிலூர் துணை சூப்பிரண்டு ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சி பி சி ஐ டி வசம் ஒப்படைக்க முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

35பேர் உயிாிழந்துள்ள சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story