தொடர் மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்


தொடர் மின்வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்:  ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 Sep 2024 5:45 AM GMT (Updated: 27 Sep 2024 6:56 AM GMT)

மின் கட்டமைப்பை தி.மு.க. அரசு மேற்கொள்ளாதது கண்டனத்திற்குரியது என ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வேளாண் வளர்ச்சிக்கும், தொழில் வளர்ச்சிக்கும், அன்றாட வாழ்விற்கும் முக்கியமாக விளங்குவது மின்சாரம். மின்சாரம் இல்லையென்றால் பொருளாதார வளர்ச்சி இல்லை என்றிருக்கின்ற நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக சென்னையில் உள்ள வண்ணரப்பேட்டை, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம், மயிலாப்பூர், மந்தவெளி, ராஜா அண்ணாமலைபுரம், அடையாறு, வேளச்சேரி, கோட்டூர்புரம், தரமணி, ஆயிரம் விளக்கு, கிண்டி, விருகம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளிலும், புறநகர் பகுதிகளான ராமாபுரம், பள்ளிக்கரணை, மேடவாக்கம், தாம்பரம், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, செம்மஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி மின் தடை ஏற்பட்டதன் காரணமாக, பொதுமக்களின் இயல்பான வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. வீட்டிலிருந்தே அலுவலகப் பணிகளை மேற்கொள்பவர்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாயினர். மின் வெட்டு காரணமாக மின் சாதனங்களை உபயோகப்படுத்த முடியாமல் பெண்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டனர். இரவிலும் இந்த மின் தடை தொடர்ந்ததால் மக்கள் தூக்கமின்றி கடும் சிரமத்திற்கு ஆளாயினர். நோய்வாய்ப்பட்டவர்கள், முதியோர், குழந்தைகள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது.

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கடும் வெயில் அடிக்காத சூழ்நிலையில் மின்சாரத்தின் பயன் கடுமையாக குறைத்திருக்கும்போது, தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மின்சாரம் கிடைக்கின்றபோது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இதுகுறித்து, மின்சார வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டால், மின்மாற்றிகள் சரியில்லை. மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளன என்று கூறுகிறார்கள். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மின் கட்டணம் பன் மடங்கு உயர்ந்த நிலையில், மின்மாற்றிகள் சரியில்லை, மின் சாதனங்கள் பழுதடைந்துள்ளன என்று கூறுவது ஏற்புடையதல்ல. மின்சாரத்திலிருந்து வரும் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், மின் கட்டமைப்பை தி.மு.க. அரசு மேற்கொள்ளாதது கடும் கண்டனத்திற்குரியது. இது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மைக்கு ஒரு எடுத்துக்காட்டு. மின்சாரத்தின் முக்கியத்துவத்தையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, பழுதடைந்துள்ள மின்மாற்றிகள், மின் சாதனங்கள், மின் பெட்டிகள் மற்றும் இதர மின் உபகரணங்களை உடனடியாக மாற்றி தொடர் மின் வெட்டிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று தி.மு.க. அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்


Next Story