மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் கன அடி உயர்வு


மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரே நாளில் சுமார் 13 ஆயிரம் கன அடி உயர்வு
x
தினத்தந்தி 1 Sep 2024 5:27 AM GMT (Updated: 1 Sep 2024 5:54 AM GMT)

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.82 அடியாக உள்ளது.

சேலம்,

கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இவ்வாறு திறக்கப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 30-ந் தேதி மேட்டூர் அணை 120 அடியை எட்டி நிரம்பியது.

இதையடுத்து காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதற்கிடையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததன் காரணமாக அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்தது.

இந்த நிலையில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையொட்டி, காவிரியில் தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று 6,396 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 19,199 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 115.82 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக 14,200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.


Next Story