விமானி மற்றும் விமான நிலைய ஊழியர்களின் விவேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது - கே.பாலகிருஷ்ணன்
சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானில் வட்டமடித்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் பத்திரமாக தரையிறங்கியது.
சென்னை,
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.
தீப்பற்றுவதை தடுக்க எரிபொருள் குறைந்த பிறகு விமானத்தை தரையிறக்குவது என விமானிகள் திட்டமிட்டனர். அதற்காக விமானம் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக வானத்திலேயே வட்டமடித்தது. ஒருபுறம் சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடைபெற்றது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருச்சி விமான நிலையத்தில், 20-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 26 முறை வானில் வட்டமடித்து கொண்டிருந்த விமானம் பத்திரமாக தரையிறங்கியது. 8.15 மணியளவில் பெல்லி லேண்டிங் முறையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. இதனால் பயணிகளும், அவர்களின் உறவினர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி மற்றும் திருச்சி விமான நிலைய ஊழியர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
திருச்சியில் இருந்து ஷார்ஜா கிளம்பிய விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து வானிலேயே வட்டமிட்டு வந்த அந்த விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. விமானி டொமினிக் பெலிசோ மற்றும் திருச்சி விமான நிலைய ஊழியர்களின் துரிதமான, விவேகமான செயல்பாடு பாராட்டுக்குரியது.
விமான பயணிகள் பதட்டமடையாத விதத்தில் சூழ்நிலையை கையாண்டு, 2 மணி நேர கடும் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் அனைவரையும் சி.பி.ஐ(எம்) சார்பில் நெகிழ்ந்து, பாராட்டி வாழ்த்துகிறோம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.