பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு


பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம்: திமுகவினருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
x
தினத்தந்தி 22 July 2024 6:02 AM GMT (Updated: 22 July 2024 9:55 AM GMT)

பேரவைக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுகவினருக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபைக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்ற அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமைக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு உரிமைக்குழு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு தனி நீதிபதி, அந்த நோட்டீசை ரத்து செய்தார். இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், தமிழ்நாடு சட்டசபை செயலாளர் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் முன்பு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை திரும்ப பெறுவதாக தமிழ்நாடு அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. இதற்கு முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தரப்பில் கூட நோட்டீஸ் வரவில்லை என கூறப்பட்டுள்ளது என நீதிபதி கூறினார். மேலும் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு கூட நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 4 பேருக்கு மட்டுமே நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது; கடந்த ஆட்சியில் நோட்டீஸ் அனுப்ப தவறிவிட்டனர் என தெரிவித்தார். இதையடுத்து நோட்டீஸ் வரவில்லை என கூறியதால் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள அப்போதை திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story