பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு


பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சாவு
x
தினத்தந்தி 3 July 2024 8:34 AM IST (Updated: 3 July 2024 11:11 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சூசை என்கிற சூசைநாதன்(வயது 49). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட அமைப்பாளராக இருந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி சின்னத்தம்பிக்கும், அவரது மனைவி பார்வதிக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினையில் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்து வந்தார்.

இந்த நிலையில் பார்வதி, கணவரிடம் கோபித்துக்கொண்டு தனது சொந்த ஊரான உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அலங்கிரி கிராமத்துக்கு சென்று விட்டதாக தெரிகிறது. இதையடுத்து சின்னத்தம்பியை அழைத்து அறிவுரை கூறிய சூசைநாதன் அவரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த சின்னத்தம்பி தனது குடும்பம் சீரழிந்ததற்கு சூசைநாதன் தான் காரணம் என்று கருதி அவரை தீர்த்துகட்ட முடிவு செய்தார்.

அதன்படி சம்பவத்தன்று நள்ளிரவு வீ்ட்டு வாசலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த சூசைநாதன் மீது சின்னத்தம்பி தான் கொண்டு வந்த கேனில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் சின்னத்தம்பி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவுசெய்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இதில் தொடர்புடைய 2 பேரை வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூசைநாதன் நேற்று சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலைவழக்காக பதிவு செய்த எலவனாசூர்கோட்டை போலீசார் சின்னத்தம்பி மற்றும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக எறையூரை சேர்ந்த அந்தோணிசாமி மற்றும் சகாயராஜ் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.


Next Story