தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Aug 2024 6:24 AM GMT (Updated: 9 Aug 2024 6:59 AM GMT)

தமிழ்ப் புதல்வன் திட்டத்தை கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

கோவை,

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ம் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 28 ஆயிரத்து 280 மாணவிகள் பயனடைந்து உள்ளனர்.

2024-25-ம் கல்வி ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை அதிகரிக்க 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த திட்டம் மூலம் மாணவர்கள் பாடப்புத்தகங்கள், பொதுஅறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி, தங்கள் கல்வியை மெருகேற்றிட உதவும் வகையில் மாதம்தோறும் ரூ,1,000 அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த திட்டம் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்து 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் சேரும் 3.28 லட்சம் மாணவர்கள் மாதம் ரூ.1,000 பெறுவார்கள். இதற்காக ரூ.360 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்ப் புதல்வன் திட்ட தொடக்க விழா கோவையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்த புதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


Next Story