அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை


அடுத்த மாதம் திருமணம் நடைபெற இருந்த நிலையில் மணப்பெண் தற்கொலை
x
தினத்தந்தி 26 Aug 2024 11:03 PM IST (Updated: 27 Aug 2024 6:10 AM IST)
t-max-icont-min-icon

திருமண அழைப்பிதழ் அச்சடித்து உறவினர்களுக்கு குடும்பத்தினர் கொடுத்து வந்தநர்.

சேலம்,

சேலம் மாவட்டம் சூரமங்கலம் உழவர் சந்தை அருகில் உள்ள சீனிவாசா காலனியை சேர்ந்தவர் தங்கவேல் ஓய்வு பெற்ற அரசு பஸ் கண்டக்டர். இவருக்கு 3 மகள்கள் இருந்தனர். இவர்களில் மூத்த மகளுக்கு திருமணம் ஆகிவிட்டது. 2-வது மகள் கார்த்திகா, பி.எஸ்சி. வேளாண்மை படித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார். இளைய மகள் காரைக்குடியில் தங்கி கல்லூரியில் படித்து வருகிறார். இதனால் வீட்டில் தங்கவேல், அவரது மனைவி மற்றும் 2-வது மகள் ஆகியோர் வசித்து வந்தனர்.

மகள் கார்த்திகாவை திருமணம் செய்து கொடுக்க முடிவு செய்து, தனது உறவினர் வீட்டில் சம்பந்தம் பேசி அடுத்த மாதம் திருமணத்தை நடத்த நிச்சயம் செய்திருந்தனர். இதற்காக திருமண அழைப்பிதழ் அச்சடித்து கடந்த ஒரு வாரமாக உறவினர்களுக்கு தங்கவேல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திருமணத்தில் மணப்பெண் கார்த்திகாவிற்கு விருப்பம் இல்லை என தெரிகிறது.

இந்நிலையில், தங்கவேல் தனது மனைவியுடன் உறவினர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க வெளியே சென்றார். பின்னர் இரவு 11 மணியளவில் அவர்கள் வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டிற்குள் மகள் மணப்பெண் கார்த்திகா தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அவர்கள் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், திருமணம் பிடிக்காததால் மணப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story