தமிழகத்திற்கும் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்...! டிசம்பரில் இயக்க வாய்ப்பு


Vande Bharat sleeper train
x
தினத்தந்தி 9 July 2024 5:37 PM IST (Updated: 9 July 2024 5:42 PM IST)
t-max-icont-min-icon

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் பெட்டிகளை தயாரித்து வரும் பி.இ.எம்.எல். நிறுவனம் அனைத்து ரெயில் பெட்டிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது.

சென்னை:

நாடு முழுவதும் தற்போது பல்வேறு முக்கிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களுக்கு பயணிகளிடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சென்னை-கோவை, சென்னை-நெல்லை, சென்னை-பெங்களூர், கோவை-பெங்களூர், சென்னை-விஜயவாடா உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

முழுக்க முழுக்க ஏசி வசதியுடன் கூடிய இந்த ரெயில்களில் இருக்கை வசதி மட்டுமே உள்ளன. எனவே, நீண்ட தொலைவுக்கு இந்த ரெயில்களை இயக்க முடியாத சூழல் காணப்படுகிறது. இதுதவிர, படுக்கை வசதியை விரும்பும் பயணிகள் இந்த ரெயில்களை தேர்வு செய்வதில்லை. நெடுந்தொலைவுக்கு இந்த படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரெயில்களை இயக்கினால் பயணிகளிடையே வரவேற்பு இன்னும் அதிகமாகும்.

இதனை கருத்தில் கொண்டு இரவு நேர பயணங்கள் மற்றும் பல மாநிலங்களுக்கு இடையே வந்தே பாரத் சேவையை அறிமுகப்படுத்தும் விதமாக வந்தே ஸ்லீப்பர் ரெயில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்போது வந்தே ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த ரெயில்களின் உட்புற தோற்றம் குறித்த புகைப்படங்கள் அண்மையில் வெளியாகின.

இந்நிலையில் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் வரும் நவம்பர் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என ஐ.சி.எப். நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதற்காக, வந்தே பாரத் ஸ்லீப்பர் பெட்டிகளின் சோதனைகளை அடுத்த மாதத்திற்குள் முடிக்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் தமிழகத்திலும் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, கேரள பயணிகளுக்கு பயன் அளிக்கும் வகையில், இரண்டு வந்தே ஸ்லீப்பர் ரெயில்களை ஒதுக்குவது குறித்து ரெயில்வே வாரியம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. அதாவது, திருவனந்தபுரம் கொச்சுவேலி -பெங்களூரு மற்றும் கன்னியாகுமரி-ஸ்ரீ நகர் ஆகிய வழித்தடங்களில் வந்தே இந்த ஸ்லீப்பர் ரெயில்களை அறிமுகப்படுத்த ரெயில்வே வாரியம் முன்மொழிந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து இயக்கப்படும ஸ்ரீநகர் வந்தே பாரத் ரெயிலை பொறுத்தவரை கொங்கன் வழித்தடத்தில் இயக்கப்படலாம் எனவும், வாரத்திற்கு மூன்று நாட்கள் சேவையாக ஸ்ரீநகர் அருகே உள்ள பத்காம் ரெயில் நிலையம் வரை இந்த ரெயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த ரெயில் சேவை உதம்பூர் - ஸ்ரீநகர்-பாரமுல்லா ரெயில்வே லைன் பணிகள் முடிந்த பிறகு டிசம்பர் மாதம் தொடங்கப்படலாம் என கூறப்படுகிறது.

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில் பெட்டிகளை பெங்களூரைச் சேர்ந்த பி.இ.எம்.எல். நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல்கட்டமாக 10 ரெயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த நிறுவனம் அனைத்து ரெயில் பெட்டிகளையும் இந்த ஆண்டின் இறுதிக்குள் டெலிவரி செய்ய திட்டமிட்டுள்ளது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரெயில்களில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உள்ளதுபோன்று, அனைத்து ஏ.சி. பெட்டிகளும் இருக்கும். நவீன உள்கட்டமைப்பு வசதிகளும் இருக்கும்.

செய்திகளை உடனுக்குடன் எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள.. https://x.com/dinathanthi


Next Story