தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - நடந்தது என்ன?


தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்: டாக்டர் சுப்பையா கொலை வழக்கு - நடந்தது என்ன?
x
தினத்தந்தி 14 Jun 2024 4:04 PM IST (Updated: 14 Jun 2024 5:52 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தையே உலுக்கிய டாக்டர் சுப்பையா கொலை வழக்கில் அனைவரையும் விடுதலை செய்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் விவரங்களை இங்கே விரிவாக பார்க்கலாம்.

சென்னை,

சென்னை உள்பட தமிழகத்தையே உலுக்கிய வழக்கு, டாக்டர் சுப்பையா (வயது 62) கொலை செய்யப்பட்ட வழக்காகும். கடந்த 2012 செப்டம்பர் மாதம் 14-ந் தேதி இந்த படுகொலை நடந்தது. டாக்டர் சுப்பையா சென்னை அரசு பொது மருத்துவ மனையில் நரம்பியல் நிபுணராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகு, சென்னை அபிராமபுரம், ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் வேலை பார்த்து வந்தார்.

செப்டம்பர் மாதம் 14-ந் தேதி, மாலை 6 மணி அளவில், தான் வேலை பார்த்த தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியில் வந்து காரில் ஏற முற்பட்டபோது, 3 பேர் கொண்ட மர்ம கும்பல், டாக்டர் சுப்பையாவை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் எதிரில் உள்ள வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. 3 ஆசாமிகள், டாக்டரை சுற்றி வளைக்கும் காட்சியும், அவர்களில் 2 பேர் டாக்டரை வெட்டும் காட்சியும், கேமராவில் பதிவான காட்சிகளாகும். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, சென்னை அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக, சென்னை ஐகோர்ட்டு வக்கீல் பைசில், அவரது சகோதரர் என்ஜினீயர் போரீஸ் ஆகியோர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரண் அடைந்தனர். வக்கீல் பைசிலின் தந்தை பொன்னுசாமி, தாயார் மேரி புஷ்பம் ஆகியோர், கோவையில் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தனர். இவர்கள் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுதலை பெற்றுவிட்டனர்.

டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டதற்கு, பின்னணி சம்பவம் ஒன்றை போலீசார் காரணமாக சொன்னார்கள். கொலை செய்யப்பட்ட டாக்டர் சுப்பையாவும், சரண் அடைந்த பொன்னுசாமியும் நெருங்கிய உறவினர்கள். பொன்னுசாமி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்.அவரது மனைவி மேரிபுஷ்பமும் ஆசிரியைதான். சுப்பையாவும், பொன்னுசாமியும், கன்னியாகுமரி அருகில் உள்ள சாமிதோப்பை சேர்ந்தவர்கள். பொன்னுசாமி தொழில் ரீதியாக, ராதாபுரம் அருகில் உள்ள காணிமடத்தில் குடியேறிவிட்டார். சுப்பையா தொழில் ரீதியாக சென்னை துரைப்பாக்கத்தில் குடியேறி விட்டார்.

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகில் உள்ள அஞ்சுகிராமத்தில் டாக்டர் சுப்பையாவுக்கு சொந்தமான 2.4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ரூ.12 கோடி மதிப்புடையது ஆகும். இந்த நிலத்துக்கு, பொன்னுசாமியும் சொந்தம் கொண்டாடினார். இந்த நிலத்தால், டாக்டர் சுப்பையாவும், பொன்னுசாமியும் ஜென்ம விரோதி ஆனார்கள்.

சுப்ரீம் கோர்ட்டு வரை வழக்கு போட்டும், நிலம் சுப்பையாவுக்கே சொந்தம் என்று தீர்ப்பாகி விட்டது. இந்த நிலத்தால் ஏற்பட்ட பகையால், டாக்டர் சுப்பையா கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் கண்டறியப்பட்டது. கூலிப்படையை ஏவி விட்டு, டாக்டர் சுப்பையாவை, பொன்னுசாமி குடும்பத்தினர் தீர்த்துக்கட்டியதாகவும் சொல்லப்பட்டது.

இந்த கொலை வழக்கில் பொன்னுசாமி உட்பட மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் அய்யப்பன் என்பவர் அப்ரூவரானார். சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் டாக்டர் சுப்பையா கொலை வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ் வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் 21-ந் தேதி நீதிபதி அல்லி தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 10 பேரில் அப்ரூவர் அய்யப்பன் தவிர பொன்னுச்சாமி, வில்லியம்ஸ், போரிஸ், செல்வ பிரகாஷ், முருகன், பேசில், மேரி புஷ்பம், ஜேம்ஸ் சதீஷ்குமார், ஏசு ராஜன் ஆகிய 9 பேர் கொலைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார் நீதிபதி அல்லி.

அத்துடன் பொன்னுசாமி, பாசில், வில்லியம், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்வபிரகாஷ் ஆகிய 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது; மேரி புஷ்பம், ஏசு ராஜன் ஆகிய 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அப்ரூவர் அய்யப்பனுக்கு தண்டனை விதிக்கப்படவில்லை. இத்தீர்ப்பை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்றத்துக்கு விசாரணை நீதிமன்றம் வழக்கு விவரங்களை அனுப்பி வைத்தது. அதேநேரத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரும் மரண தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் இதனை விசாரித்தனர். அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் பிரபாகரன் ஆஜராகி வாதாடினார்.

தண்டனை விதிக்கப்பட்டோர் சார்பாக வழக்கறிஞர் சவுத்ரி, மூத்த வழக்கறிஞர்கள் சண்முக சுந்தரம், கோபாலகிருஷ்ண லட்சுமணராஜூ, ஜான் சத்யன் ஆஜராகி வாதாடினர். அனைத்துத் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுகளை போலீசார் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறிவிட்டதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 7 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 2 பேர் என மொத்தம் 9 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக நீதிபதிகள் இன்று தீர்ப்பளித்தனர். மேலும் 9 பேரும் வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் உடனடியாக விடுதலை செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story