செய்தி சில வரிகளில்...


செய்தி சில வரிகளில்...
x
தினத்தந்தி 1 Jun 2024 7:42 AM GMT (Updated: 1 Jun 2024 11:13 AM GMT)

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

*மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் கேட்டு டெல்லி சிறப்பு கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு செய்து இருந்தார். இருதரப்பு விவாதத்துக்கு பின்னர் இந்த மனு மீது 5-ந் தேதி தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி அறிவித்தார். இதனால் இடைக்கால ஜாமீனில் இருக்கும் கெஜ்ரிவால் நாளை திகார் சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

*டெல்லியில் இந்தியா கூட்டணி தலைவர்கள் கூடி இன்று மாலை ஆலோசனை நடத்தினர். காங். தலைவர் கார்கே வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தல் முடிவு பற்றி ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் மம்தாபானர்ஜி, மெகபூபா முப்தி ஆகியோர் பங்கேற்கவில்லை.

*மிசோராமில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலச்சரிவில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்தது. இன்று ஒரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. காணாமல் போன மேலும் 5 பேரை தேடும் பணி தொடருகிறது.

*கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. திருச்சூர், மலப்புரம், கோட்டயம் மாவட்டங்களுக்கு வானிலை மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்து இருந்தது. இடுக்கி, பாலக்காடு, வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

* நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் 57 தொகுதிகளில் இன்று விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்காளத்தில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டும் வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. வாக்குப்பதிவு எந்திரங்கள் தண்ணீரில் வீசப்பட்டன.

* நடிகர் சல்மான்கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக தாதா பிஸ்னோய் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மும்பை புறநகரில் உள்ள பண்ணை வீட்டுக்கு சல்மான்கான் செல்லும் போது அவரை சுட்டுக்கொல்ல அவர்கள் திட்டம் தீட்டி இருந்தது தெரியவந்தது.

* 172 பயணிகளுடன் சென்ற சென்னை- மும்பை இண்டிகோ விமானம் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக மும்பை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சோதனைக்கு பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது.

* பிரதமர் மோடி இன்றும் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்டு வருகிறார். விவேகானந்தர் மண்டபத்தில் பூஜை செய்து வழிபாடு நடத்தினார். மாலையில் தனது தியானத்தை முடித்துக்கொண்ட பிரதமர் மோடி பின்னர் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பகுதிக்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் திருவனந்தபுரம் வழியாக டெல்லி திரும்பினார்.

* தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது நடந்து கொள்ள வேண்டிய முறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைப்பு செயலாளர் ஆ.எஸ். பாரதி, தி.மு.க. எதையும் எதிர்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

* இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு தீர்வு காணும் வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ள திட்டத்துக்கு ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆதரவு தெரிவித்துள்ளன.

* சீனா- பாகிஸ்தான் இடையே புதிய வழித்தடத்தில் விமான சரக்கு போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டு உள்ளது. பாக். பிரதமர் அடுத்தவாரம் சீனா செல்லும் போது இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என்று தெரிகிறது.


Next Story