குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்- செந்தில்பாலாஜி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல்


குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்-  செந்தில்பாலாஜி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல்
x
தினத்தந்தி 21 July 2024 4:29 PM GMT (Updated: 21 July 2024 4:30 PM GMT)

அமலாக்கத்துறை வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும் என்று செந்தில்பாலாஜி சென்னை கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை,

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சென்னை புழல் சிறையில் இருந்து வருகிறார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனுவை சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

அதேவேளையில், இந்த வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்வதற்காக செந்தில் பாலாஜியை 22-ந் தேதி(இன்று) நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார். இந்தநிலையில் சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் செந்தில்பாலாஜி புதிதாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 'அமலாக்கத்துறை வழக்கில் இருந்து என்னை விடுவிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அந்த உத்தரவை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய உள்ளேன். இந்த மேல்முறையீட்டு மனு மீது ஐகோர்ட்டு இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க வேண்டும்' என கூறி உள்ளார். இந்த மனு நாளை (திங்கட்கிழமை) விசாரணைக்கு வர உள்ளது.


Next Story