20-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் தே.மு.தி.க - தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்


20-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் தே.மு.தி.க - தொண்டர்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் கடிதம்
x
தினத்தந்தி 14 Sept 2024 1:44 PM IST (Updated: 14 Sept 2024 2:48 PM IST)
t-max-icont-min-icon

ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை,

தே.மு.தி.க. தொடங்கி 19 ஆண்டுகள் நிறைவடைந்து 20-ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கும் நிலையில், அக்கட்சியின் தொண்டர்களுக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

நல்ல நோக்கத்திற்காகத் தொடங்கப்பட்ட கட்சி நமது தேசிய முற்போக்கு திராவிட கழகம். நமது கட்சி தொடங்கி 19 ஆண்டுகள் முடிவடைந்து இன்று (14.09.2024) 20-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு என்று தனி வரலாறு உண்டு. எந்த கட்சியுடன் இருந்தும் பிரிந்து வராமல், லஞ்சம், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக அனைத்து துறைகளிலும் முன்னேற்ற உறுதி கொண்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சி தே.மு.தி.க. தொடர்ந்து மக்களுக்காக மக்கள் பணி ஆற்றி, தமிழ்நாட்டு மக்களின் இதயங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. சாதி, மதம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்ட கட்சியாக ஒரே குலம், ஒரே இனம் என்ற கோட்பாட்டோடு சனாதானத்தை கடைபிடிக்கும் கட்சியாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதே பாணியில்தான் எப்போதும் செயல்படும்.

தமிழ்நாட்டில் நிலவும் மணல் கொள்ளை, மீனவர்கள் பிரச்சனை, டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் அவலங்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சனை, பாலியல் வன்கொடுமைகள் சுங்க கட்டண உயர்வு, அண்டை மாநிலங்களுக்கிடையே உள்ள தண்ணீர் பிரச்சனை, விவசாயம் அழிந்து பாலைவனமாக காட்சியளிக்கும் டெல்டா பகுதிகள், அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளதால் மக்கள் பயன்படுத்த முடியாத அவலம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு போன்ற எத்தனையோ பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றிற்கு தீர்வு காணவும், தமிழ்நாட்டில் வறுமை கோட்டிற்கு கீழ் மக்களே இல்லை என்ற நிலையை உருக்கவும் தே.மு.தி.க. தொடர்ந்து மக்களுக்காகவும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் பாடுபடும். எத்தனையோ வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், அவதூறு வழக்குகள் வந்த போதும் பல சவால்களை சந்தித்து வீறு நடை போடுகிறது நமது கழகம். நம் கழகத்தினர் உண்மை விசுவாசத்தின் பிரதிபலிப்பாகவும், முன் எப்போதும் இருப்பதை காட்டிலும் பல மடங்கு ஒற்றுமையாகவும், உறுதியோடும் இருந்து, வரப்போகும் தேர்தல்களை சந்தித்து தே.மு.தி.க. இன்று தமிழ்நாட்டில் அசைக்க முடியாத சக்தி என்றும் தமிழ்நாட்டில் யாரும் தவிர்க்க முடியாத மாபெரும் இயக்கம் என்றும், நம் உழைப்பால் மேலும் உணர்த்துவோம்.

தே.மு.தி.க. தனக்கென்று ஒரு இடத்தை தக்க வைத்து கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு முக்கியமாக சாதி, மதம், இனம் போன்ற எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவருக்கும் பொதுவான கட்சியாக தொடர்ந்து பாடுபட்டு வருவதே ஆகும். எந்தவித வன்முறைக்கும் இடம் கொடுக்காமல் அறவழியில் மக்கள் பிரச்சனைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து போராடி வரும் இயக்கமாகும். தமிழக மக்கள் நம் இயக்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை மேலும் உயர்த்தும் வண்ணம் செயல்படுவோம். "இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே" என்கிற கொள்கையின் அடிப்படையில் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து கழக துவக்க நாளை வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும்.

2005-ம் ஆண்டு மதுரை மாநகரில் நமது அன்பு தலைவர் புரட்சி கலைஞர் கேப்டனால் இன்றைய நாளில் துவங்கப்பட்ட தேசிய முற்போக்கு திராவிட கழகம் 20-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. பல்வேறு வெற்றிகள், தோல்விகள், சவால்கள், எதிர்நீச்சல் போட்டு துரோகங்கள் எல்லாவற்றையும் சந்தித்து நமது பாதையில் எத்தனையோ கற்களும், முற்களும் இருந்தாலும் எல்லாவற்றையும் கடந்து 20-ம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் கழகத்தினுடைய அனைத்து மாவட்டம், பகுதி, ஒன்றியம், நகரம், பேரூர், வார்டு, வட்டம், ஊராட்சி, கிளைக் கழகம் அனைத்து சார்பு அணி மற்றும் மகளிர் நிர்வாகிகள், தொண்டர்கள் இந்த நாளில் நாம் எடுத்துக்கொண்ட கேப்டனின் கனவு மற்றும் லட்சியத்தை நிச்சயமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து வென்றெடுப்போம் என்று சபதம் ஏற்று, இந்த நாளில் இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே, தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்ற தலைவரின் தாரக மந்திரப்படி எட்டுத்திக்கும் நமது முரசு வெற்றி முரசாக கொட்ட அனைவரும் ஒன்றாக இணைந்து உழைப்போம், வெற்றி பெறுவோம் என இந்த நன்னாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story