பாரா ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மாரியப்பனுக்கு உற்சாக வரவேற்பு
பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு அவரது சொந்த ஊரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம்,
சேலம் மாவட்டம் பெரிய வடகம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் தங்கவேல். இந்திய தடகள வீரரான இவர், பிரான்சில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டியில்ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.85 மீட்டர் உயரம் தாண்டி வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தார். மாரியப்பன் தனது சொந்த ஊரான வடகம்பட்டிக்கு நேற்று வந்தார்.
அவருக்கு தீவட்டிபட்டி பஸ் நிலையம் அருகில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் பிருந்தா தேவி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அவருடன் மேட்டூர் உதவி கலெக்டர் பொன்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தீவட்டிப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து மேளதாளம் முழங்க கிராம மக்கள் மாரியப்பனை ஊர்வலமாக திறந்த காரில் அழைத்துச் சென்றனர். அவரது கிராம மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.
வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாரியப்பன் கூறுகையில், நடந்து முடிந்த பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் தங்கம் வெல்வதே இலக்கு என்று நம்பிக்கையுடன் கூறினார்.