"நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்..." - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்


நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும்... - தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 Aug 2024 4:20 PM IST (Updated: 21 Aug 2024 4:35 PM IST)
t-max-icont-min-icon

நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம் என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2-ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார். வரும் 2026 தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக விஜய் அறிவித்துள்ளார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக் கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22. நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக்கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலை வெளியிட்டு, கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன். நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 9.15 மணிக்கு பனையூரில் நடக்கும் கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 250 நிர்வாகிகள் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. விஜய் அறிமுகம் செய்யும் த.வெ.க. கொடியில் சமத்துவத்தை போற்றும் வகையில் லோகோ இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. த.வெ.க. அறிக்கைகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், அதை மையமாக வைத்து லோகோ தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் விஜய் கட்சி கொடியில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் இடம்பெறுமா? அல்லது சமத்துவத்தை குறிக்கும் லோகோ இடம்பெறுமா? என தொண்டர்கள், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.




Next Story