சென்னையில் லிப்ட் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு - அண்ணாமலை இரங்கல்
சென்னையில் லிப்ட் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
"சென்னை புளியந்தோப்பு கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பில், லிப்ட் கோளாறு காரணமாக, 7-வது மாடியில் இருந்து தவறி விழுந்து, கணேசன் என்ற 52 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்திருக்கிறார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏழை எளிய மக்களுக்காகக் கட்டப்பட்ட இந்த கே.பி. பார்க் அடுக்குமாடி குடியிருப்பு, தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவரங்கள், ஐ.ஐ.டி. ஆய்வுக் குழு அறிக்கையின் மூலம் தெரிய வந்தது. இதனையடுத்து, இந்த குடியிருப்பைக் கட்டிய பி.எஸ்.டி. எஞ்சினியரிங் நிறுவனம், அரசுப் பணிகளில் பங்கேற்க முடியாதவாறு, கருப்புப் பட்டியலில் வைக்கப்படும் என்று தி.மு.க. அரசு கூறியது. தரமற்ற குடியிருப்புகளைக் கட்டிய பி.எஸ்.டி. நிறுவனம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஆனால் கடந்த ஆண்டு, சென்னை நந்தம்பாக்கத்தில், ரூ.250 கோடி மதிப்பிலான நிதிநுட்ப நகரம் அமைக்க, மீண்டும் இதே பி.எஸ்.டி. நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியது தி.மு.க. அரசு. இது குறித்து, கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 19 அன்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு பதிலளித்த தி.மு.க. அரசு, முறையான டெண்டர் வழியே தான், அந்த நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது என்று பதிலளித்தது. கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனம் எப்படி அரசு ஒப்பந்தத்தில் பங்கேற்றது என்ற கேள்விக்கு இது வரை பதில் இல்லை.
தற்போது, லிப்ட் கோளாறு காரணமாக ஒரு உயிர் பறிபோயிருக்கிறது. ஐ.ஐ.டி. ஆய்வறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தரக்குறைவான கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்துக்கே மீண்டும் மீண்டும் அரசுப் பணிகள் வழங்கி வரும் தி.மு.க. அரசே இதற்கு முழு பொறுப்பு.
ஏழை எளிய மக்களின் உயிர் என்றால் தி.மு.க.வுக்கு அத்தனை இளக்காரமாகி விட்டதா? உடனடியாக, இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், தரமற்ற கட்டிடங்கள் கட்டி வரும் பி.எஸ்.டி. நிறுவனம் மீதும், மீண்டும் மீண்டும் அரசுப் பணிகளை இந்த நிறுவனத்துக்கு வழங்கி வரும் அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்."
இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.