பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதி எண் 309-ல், "புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" என்று குறிப்பிட்டிருக்கிறது. தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் பழைய ஒய்வூதியத் திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை. ஆனால், இந்தத் திட்டம் சாத்தியமற்றது என்று ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே அப்போதைய தமிழ்நாடு நிதி அமைச்சர் அறிவித்துவிட்டார். இது குறித்து, சில மாதங்களுக்கு முன் கருத்து தெரிவித்த நிதி அமைச்சர், பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு அரசின் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிவித்திருந்தார். இவை எல்லாம் பத்திரிகைகளில் செய்தியாக வந்தன. இருப்பினும், பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது கிணற்றில் கல்லைப் போட்டது போல அசையாமல் உள்ளது.
இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த மத்திய அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. இதன்படி, 25 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வு பெறும் முன் கடைசி 12 மாதங்களில் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 50 விழுக்காடு ஓய்வூதியம் அளிக்கப்படும் என்றும், அதற்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு அவர்களின் பணிக்காலத்திற்கேற்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் ஓய்வூதியதாரரின் மறைவுக்குப் பின் அவர் பெற்ற ஊதியத்தில் 60 விழுக்காடு குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும் என்றும், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு குறைந்தபட்சம் பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும், விலைவாசிக்கேற்ப அகவிலைப்படி மாற்றியமைக்கப்படும் என்றும், பணிக்கொடை மற்றும் கூடுதல் ரொக்கப் பலன்கள் அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
இது மட்டுமல்லாமல், 2004-ம் ஆண்டு முதல் தேசிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் இந்தத் திட்டம் பொருந்தும் என்றும், அவர்களுக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் திட்டத்தினை மாநில அரசுகளும் செயல்படுத்திக் கொள்ளலாம் என்றும், இதன்மூலம் 90 லட்சம் அரசு ஊழியர்கள் இந்தியா முழுவதும் பயன்பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்பது தங்களுடைய பெரும்பாலான கோரிக்கைகளை பூர்த்தி செய்துள்ளதாக கூட்டு ஆலோசனை அமைப்பின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன. இந்தத் திட்டம் பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு இணையாக இல்லை என்று சொன்னாலும், வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
எவ்வித வாக்குறுதியும் அளிக்காத சூழ்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென்ற எண்ணத்தில் ஒரு முயற்சி எடுத்து மேற்படி திட்டத்தினை மத்திய அரசு 01-04-2025 முதல் செயல்படுத்துகிறது. ஆனால், வாக்குறுதி அளித்த தி.மு.க. மவுனம் சாதிக்கிறது. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் துளிகூட இல்லாத தி.மு.க. அரசின் செயல் கண்டிக்கத்தக்கது. ஆட்சி பொறுப்புக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென்றும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற மறுநாளிலிருந்து ஓய்வூதியம், பணிக்கொடை மற்றும் இதர பணப் பலன்களை வழங்கவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.