சிறுவன் மீது மோட்டார் சைக்கிள் ஏறி விபத்து - மாணவன் மீது வழக்குப்பதிவு
10-ம் வகுப்பு மாணவன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் சிறுவன் படுகாயமடைந்தான்.
திருச்சி,
திருச்சி கொட்டப்பட்டு வெங்கடேஸ்வரா நகரில் உள்ள ஒரு வீதியில் கடந்த சனிக்கிழமை காலையில் தீரன் என்ற 4 வயது சிறுவன் உள்பட 3 சிறுவர்கள் வீட்டின் முன் விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது, அந்த வழியாக 10-ம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்தான். புல்லட் சத்தம் கேட்டு விளையாடிக்கொண்டு இருந்த சிறுவன் திடீரென வீட்டுக்குள் ஓட முயன்றபோது, புல்லட் சிறுவன் மீது மோதியதுடன், அவன் மீது ஏறி இறங்கியது.
இதில் படுகாயம் அடைந்த சிறுவனை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த மாணவனின் தந்தை திருச்சி கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
இந்த விபத்து குறித்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 18 வயது நிரம்பாத சிறுவர்கள் மோட்டார் சைக்கிள் ஓட்டக்கூடாது என்று சட்டம் உள்ள நிலையில், மோட்டார் சைக்கிள் ஓட்டும் சிறுவர்களை கண்டிக்க வேண்டிய போலீஸ் அதிகாரியே தனது மகனிடம் மோட்டார் சைக்கிளை எப்படி கொடுத்தார் என்றும், புல்லட் ஓட்ட சிறுவனை அனுமதித்த போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், சிறுவன் மீது இருசக்கர வாகனத்தை ஏற்றி விபத்து ஏற்படுத்திய மாணவன் மற்றும் அவரது தந்தையான சிறப்பு உதவி ஆய்வாளர் மீது மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.