கார்பன் உமிழ்வை குறைக்கும் சிறுபுனல் மின் திட்ட கொள்கை - தமிழக அரசு அரசாணை


கார்பன் உமிழ்வை குறைக்கும் சிறுபுனல் மின் திட்ட கொள்கை - தமிழக அரசு அரசாணை
x
தினத்தந்தி 6 Sept 2024 12:43 AM IST (Updated: 6 Sept 2024 1:56 AM IST)
t-max-icont-min-icon

சிறுபுனல் மின் திட்டங்கள் குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

சிறுபுனல் மின் திட்டங்கள் கொள்கைக்கு தமிழக அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் இது தொடர்பாக தமிழக அரசின் எரிசக்தித்துறை செயலர் (பொறுப்பு) பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

"புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை அதிரிக்கும் நோக்கில் தமிழக அரசு, 100 கிலோவாட் முதல் 10 மெகாவாட் வரையிலான மின் நிலைய திறன் கொண்ட சிறுபுனல் மின் திட்டங்களை ஏற்படுத்தி வருகிறது. உள்ளூர் மின் உற்பத்திக்கான வாய்ப்பாகவும், ஊரக பகுதிகளில் மின் தேவையை பூர்த்தி செய்யவும் இந்த திட்டங்கள் பயன் தருகின்றன.

இந்த சிறுபுனல் மின் திட்டங்கள், குறைந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், எளிதான மற்றும் நிலையான எரிசக்தி வளமாகவும் இருக்கிறது. மேலும், இந்த சிறுபுனல் திட்டங்களை மேம்பாட்டாளர்கள் தங்கள் சொந்த தேவைக்கும், அரசுக்கு விற்பனை செய்யவும், புதுப்பிக்கத்தக்க மின்சார கொள்முதல் தேவையை பூர்த்தி செய்யவும் உதவும் என தமிழ்நாடு எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

இந்த கொள்கையானது, கார்பன் உமிழ்வை குறைத்து, புதுப்பிக்கத்தக்க மற்றும் தரமான மின்வளத்தை ஏற்படுத்துவதை ஊக்குவிக்கும். இந்த திட்டம் கால்வாய்கள், ஆறுகள், ஓடைகளில் இருந்து தடையற்ற மின்சாரம் கிடைப்பதை ஊக்குவிக்கும் நிலக்கரி உள்ளிட்டவற்றை நம்பியிருப்பதை குறைக்கும். சிறுபுனல் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான ஊக்கச் சலுகைகள் அளிப்பதன் மூலம் தனியார் பங்களிப்பை ஈர்க்கும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுடன், திறன் மேம்பாட்டையும் ஊக்குவிக்கும். சிறுபுனல் மின் திட்டங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்கும். பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் குறித்த புரிதலை ஏற்படுத்தும்.

இந்தக் கொள்கை 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும். தேவைப்பட்டால் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். சிறுபுனல் மின் திட்டங்களில் இருந்து மின் உற்பத்தி தொடங்கப்படுவது முதல் 40 ஆண்டுகள் வரை இருக்கும். இந்த காலத்துக்கு அனைத்து வகையான சலுகைள், ஊக்கங்கள் வழங்கப்படும். மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படவும் வாய்ப்புள்ளது.

தனியார் அல்லது ஒரு நிறுவனம், தனியார் பலர் இணைந்து உருவாக்கிய அமைப்பு ஆகியோர் இந்த சிறு புனல் மின் திட்டங்களை அமைக்கலாம். அல்லது சுய தேவைக்காகவும் அமைத்து, மின்சாரத்தை பரிமாறிக் கொள்ளலாம். இந்த கொள்கைப்படியான மின் திட்டங்களுக்கு தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழக நிறுவனம் ஒப்புதல் அளிக்கும் நிறுவனமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் நீரை மீண்டும் அதன் வழியிலேயே திருப்பியனுப்ப வேண்டும். ஓடையின் இயற்கையான பாதையில் குறைந்தபட்ச இடையூறு மட்டுமே இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

கால்வாய்களில் குடிநீர் மற்றும் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கும்போதுதான் மின் உற்பத்தி செய்ய முடியும். கால்வாய், ஆறு அல்லது ஓடைகளில் மின் உற்பத்திக்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று ஒரு போதும் திட்ட மேம்பாட்டாளர் கோர உரிமையில்லை.

திட்ட மேம்பாட்டாளர்கள் ஒரு மெகாவாட் நிறுவு திறனுக்கு ரூ.25 ஆயிரம் ஆண்டு கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும், உற்பத்தி செய்யும் மின்சாரத்தில் 10 சதவீதத்தை அரசுக்கு இலவசமாக தரவேண்டும். உற்பத்தி இடத்துக்கும் மின் தொடரமைப்புக்கும் இடையிலான தூரத்தில் மின் கடத்திகள் அமைப்பது மேம்பாட்டாளரை பொறுத்ததாகும்."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story